எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறேன்’ கடலூரில் விஜயகாந்த் பிரசாரம்

எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறேன் என்று கடலூரில் விஜயகாந்த் கூறினார்.

விஜயகாந்த் பிரசாரம்

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூரில் நேற்று பிரசாரம் செய்தார. கடலூர் உழவர் சந்தை முன்பு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று அவர் பேசியதாவது-

நல்ல தீர்ப்பு வழங்குங்கள்

கடலூரில் நமது வேட்பாளர் அண்ணன் தாமோதரனுக்கு எதிராக அ.தி.மு.க.இல் அவரது தம்பியை நிறுத்தி இருக்கிறார்கள். அண்ணா காலத்தில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுப்பிரமணியன் என்பரை காமராஜர் நிறுத்தினார். அதன் பிறகு சுப்பிரமணியனின் தம்பி தி.மு.கவில் சீட் கேட்ட போது அறிஞர் அண்ணா கொடுக்க மறுத்துவிட்டார். ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இரண்டு பேரும் நிற்கக்கூடாதுப்பா! உங்கள் குடும்பத்தில் பிரிவினை வரக்கூடாது. ஆகையினால் நான் உன்னை நிறுத்த மாட்டேன் என்று அண்ணா பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டார்.

ஆனால் அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கிற அ.தி.மு.வில் பாருங்கள், அண்ணனுக்கு எதிராக தம்பியை நிறுத்தி குடும்பதில் சண்டையை மூட்டி விடுகிறார்கள். இப்படியெல்லாம் செயல்படுபவர்களுக்கு வாக்களிக்கலாமா? நல்ல தீர்ப்பை நீங்கள்தான் வழங்க வேண்டும்.

தவளைக் கதை

நமது நாடு சுதந்திரம் அடைந்து 60 வருடம் ஆகியும் தாழ்த்தப்பட்ட மக்கள் 80 சதவீதம் பேர் ஏழைகளாக இருக்கிறார்கள். இதேபல் பிற்படுத்தப்பட்ட மக்களில் 80 சதவீதம் பேர் ஏழைகள் இருக்கிறார்கள்.

எனக்கு ஒரு கதை ஞாபதுக்கு வருகிறது. பாலைவனத்தில் ஒரு தவளை போய் கொடு இருந்ததாம். நல்ல சூடு! கீழேயும், மேலேயும் எங்கேடா போகிறது? என்று தவித்துக் கொண்டு இருந்ததாம். அப்போது தவளை ஒரு நிழலை பார்த்தாம். உடனே அந்த நிழலில் போய் இருந்தாம். நிழலுக்குள் ஒதுங்கின பிறகு தான் தெரிந்ததாம், அது படம் எடுத்துக்கொண்டு இருக்கிற கருநாகத்தின் நிழல் என்று.

ஆகவே மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கற நீங்கள், இந்த தவளை மாதிரி போகாமல் கொஞ்சம் யோசிச்சு போங்க என்று சொல்கிறேன் மக்களே! அதாவது கொதிக்கிற எண்ணையில் இருந்து எரிகிற அடுப்புக்குள் விழுந்து விடாதீர்கள் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். எது மாற்றத்தை கொடுக்கும்? மாற்றத்தை கொடுக்கிற கட்சி எது? என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

இலவச கம்ப்யூட்டர்

தே.மு.தி.க வெற்றி பெற்றால் 40 இடங்களில் வர்த்தகமையம் அமைத்துக்கொடுப்பேன். வர்த்தக மையம் அமைத்துக்கொடுத்தால் குண்டூசியில் இருந்து ஹெலிகாப்டர் வரைக்கும் அங்கே கிடைக்கும். அப்படி 40 இடங்களிலும் வர்த்தக மையம் அமைக்கும் போது நீங்கள் சீனாவைப்பாரு என்று சொல்ல வேண்டாம். தமிழ்நாட்டை பார் என்ற சொல்லலாம்.

இதேபோல் தமிழ்நாடு பேங்க் வைத்து ஒவ்வொருவருக்கும் தொழில் செய்ய 10 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பேன். கடன் கொடுத்த உங்கள் தொழில் செய்ய வைப்பேன். அதுதான் என்னுடைய திட்டம்.

அதே போல் எல்லா கிராம்ப்புற பகுதிகளிலும் நடமாடும் கால்நடை மருத்துவமனை அமைத்துக் கொடுப்பேன். ஒவ்வொரு நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் வைத்துக்கொடுப்பேன். இலவசமாக இளைஞர்கள், மாணவ – மாணவிகள் படிக்க வேண்டும். கூரை இல்லாத கல்வீடுகள் கட்டித்தரப்படும். பெண்கள் படிப்பில் முன்னேறுவதற்காக 40 தொகுதிகளிலும் கலை – அறியவில் கல்லூரிகளை தொடங்குவேன்.

விலைவாசி உயர்வு

இவர்களும் முல்லைப்பெரியார், காவிரி பிரச்சினை, பாலாறு பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை என்று திட்டங்களையெல்லாம் சொல்வார்கள்.

ஆனால் இன்றைக்கு இருக்கிற நடைமுறை பிரச்சினைகளில் மக்களுக்கு என்ன பண்ண போகிறீர்கள்?

நான் அன்றைக்கே விலைவாசி ஏறிப்போய்விட்டது என்ற போது சொன்னேன். குடும்ப நிதி கொடுங்கள். குறைந்தது ஒரு 500 ரூபாய் ஆவது கொடுங்க! குடும்ப நிதி கொடுத்தால் அந்த பாரம் குறையும் மக்களே! ஆனால் இதுவரைக்கும் அவர்கள் கேட்கவில்லை.

இந்த நேரத்தில் உங்களிடம் காசு கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த காசை வாங்காதீர்கள். அது பாவப்பட்ட காசு! லஞ்ச கொடுக்கிறவங்க பாராட்டியா கொடுப்பார்கள். நீ நாசமா போ என்று தான் கொடுப்பான். எனவே அப்படி கொடுக்கிற காசை நாம் வாங்கினால் நம்ம குடும்பம் நல்லாயிருக்காது ஆகவே அவங்க கொடுக்கிற காசை வாங்காதீங்க. உங்களுக்கு தெரியாமல் வீட்டுக்குள்ளே போட்டாலும், தயவு செய்து அதை எடுத்து தலையை சுற்றி வீட்டுக்கு வெளியே போட்டு விடுங்கள்.

ஆகவே எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயமாக ஒருமாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறேன். உங்கள் வேட்பாளர் தாமோதரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Leave a Reply