சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் விஜயகாந்த் தெரிவிப்பு!
திருச்செந்தூர்: சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வேட்பாளர் கோமதி கணேசனுக்காகப் பிரசாரம் செய்த விஜயகாந்த் பேசியதாவது;
இந்தத் தொகுதியில் ஏன் தேர்தல் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும். அரசுக்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். அப்போதுதான் ஆளும் கட்சியினருக்குப் பயம் வரும்.தே.மு.தி.க. 21 ஆவது கட்சி என்றார்கள். அப்படிச் சொன்னவர்களை இன்று காணவில்லை. தற்போது களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமே உள்ளன. தைரியம் இருந்தால் அவர்களும் வந்து நிற்கலாம்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் விலைவாசி குறையவில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால், இங்கு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தமிழ் நாட்டில் 62 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. உங்களால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்க முடியுமா? எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம்.
தே.மு.தி.க. உருவானதில் இருந்து அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. மார்ட்டின் லூதர் கிங் என்றாவது ஒருநாள் மக்கள் மத்தியில் தலைவராக நிற்பேன் என்றார். அதேபோல், நானும் ஒருநாள் நிற்பேன்.தே.மு.தி.க.வில் இஸ்லாமியர்களுக்கே அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்றார்.