விஜயகாந்த் ரசிகர் மன்றக் கொடியே, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சிக் கொடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொடியை அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.

இந்த மாநாட்டில் மாநிலப் பொது செயலாளர் சொ. ராமுவசந்தன் பேசியதாவது:

1978-ம் ஆண்டு விஜயகாந்த் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. 1981-ல் அகில இந்திய விஜயகாந்த் ரசிகர் மன்றமாக உருவெடுத்தது.

தமிழ் மொழி தவிர, வேறு எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என விஜயகாந்த் பின்னர் அறிவித்தார். இதையடுத்து, ரசிகர் மன்றத்தின் பெயர் ‘தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம்’ என்று மாற்றப்பட்டது.

1985-முதல் விஜயகாந்த் தனது பிறந்த தின விழாவை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தி வருகிறார். தனது வருவாயிலிருந்து மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். நெசவாளர் பிச்சினை, காவிரிப்பிரச்சினை ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றினார். தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.

திரை உலகில் மட்டுமல்லாமல், அரசியல் வாழ்க்கையிலும் சமூக நலனுக்காகப் பாடுபடுபவர் விஜயகாந்த் மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியல். அதற்கான தகுதியும் அவருக்கு உள்ளது. தமிழ்பண்பாட்டை நேசிக்கக்கூடிய விஜயகாந்த் முதல்வராக வர வேண்டும் என்றார்.

மாநிலத் துணைத்தலைவர் ஆர். சுந்தர்ராஜன், மாநில இணைச் செயலாளர் எஸ். ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் வி.ஆர். ரவிச்சந்திரன், மன்ற நிர்வாகிகள் செல்வம், வழக்கறிஞர் மாலதி, வழக்கறிஞர் சந்தோஷ்குமார், திரைப்பட இயக்குநர் ஈசுவரன் உள்பட பலர் பேசினர்.