நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலின் மூலமாக தமிழக மக்கள் முதல்முறையாக எந்த ஒரு கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காதவாறு வாக்களித்து கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டுள்ளார்கள். முதல்முறையாக பலம் பொருந்திய எதிர்கட்சியை ஆளும் கட்சி சட்டமன்றத்தில் எதிர்கொள்ளப்போகிறது.

இதைவிட முக்கியமான நிகழ்சியாகக் கருதப்படுவது – கட்சி ஆரம்பித்து ஆறே மாதத்தில் தேர்தலை எதிர்கொண்ட அதுவும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனியாகவே 232 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்தின் தைரியம் தான். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பதைப் போல பா.ம.க.வின் கோட்டையான விருத்தாசலத்தில் போட்டியிட்டு ஜெயித்தும் உள்ளார். தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 8.38 சதவீத வாக்குகளை விஜயகாந்தின் தே.மு.தி.க பெற்றுள்ளது. பல இடங்களில் தி.மு.க அ.தி.மு.கவின் ஓட்டுகளை தே.மு.தி.க கணிசமான அளவில் பிரித்துள்ளது.

அ.தி.மு.க விஜயகாந்தின் கட்சியுடன் தேர்தல் கூட்டு வைத்து இருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்து இருக்கும் என்றும் அ.தி.மு.க இன்னும் 92 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்து இருக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். விஜயகாந்த் என்பவர் அலட்சியப் படுத்தக் கூடியவர் அல்லர் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்து இருக்கிறார். கட்சி ஆரம்பித்த ஆறே மாதத்தில் மக்களிடையே அதிக அளவில் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களைக் கொண்டு முக்கியமாக கடைசி நிமிடத்தில் ஒதுக்கப்பட்ட சின்னத்தைக் கொண்டு ஒரு கட்சி இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது கட்சி சாராத மக்கள் கழகங்களின் ஆட்சியில் மாற்றத்தை விரும்புவது தெளிவாகத் தெரிகிறது.

கட்சி ஆரம்பித்து பல நடிகர்கள் காணாமல் போன நிலையில் விஜயகாந்த் இத்தேர்தலில் பெற்றுள்ள வெற்றியே ஒரு சாதனை தான். தற்போது சட்டமன்றத்திற்குள் விஜயகாந்த் ஒருவர் மட்டுமே அவர் கட்சி சார்பில் நுழையப்போகிறார் என்றாலும் அவரது கொள்கைகளையும் கட்சி கோட்பாடுகளையும் இன்னும் தெளிவாக மக்களிடையே பரப்பினார் என்றால் இன்னும் சில ஆண்டுகளில் விஜயகாந்தும் அவரது கட்சியும் தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார்கள்.