மத்தியிலும் மாநிலத்திலும் அரசு நிர்வாகம் சீர்கெட்டு விட்டது என்று நடிகர் விஜயகாந்த் பேசினார்.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சுரேசை ஆதரித்து திருவேற்காடு பஸ் நிலையம் அருகே நடிகர் விஜயகாந்த் வாக்கு சேகரித்து பேசியதாவது:-
ரெயில் கடத்தல்
அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு அரசுகளும் மக்களை குழி தோண்டி புதைத்து இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் மணல் கடத்தல், ஆள் கடத்தல், விமானம் கடத்தல், அரிசி கடத்தல் போன்றவை தான் இருந்தன.
தற்போது ரெயில் கடத்தலும் ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் நிர்வாக சீர்கேட்டிற்கு உதாரணங்கள் ஆகும். இவர்களை நம்பி காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீர்கள்.
பஸ் கட்டணம் குறைப்பு
இன்றையில் இருந்து பஸ் கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள். ஆதாரத்துடன் நான் நிரூபிப்பேன். 21 ரூபாய் பஸ் கட்டணம் 8 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் அப்படியே இருந்தால் பரவாயில்லை.
ஆனால், தேர்தலுக்கு பிறகு கட்டணத்தை ஏற்றி விடுவார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் என்று கூறுகிறார்கள். ஆனால் நேற்று இலங்கை தமிழர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியென்றால் போர் நிறுத்தம் எங்கே?
உலக வர்த்தக மையம்
மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை; காரணம் தேர்தல் பிறகு மின்சார கட்டணத்தை ஏற்றி விடுவார்கள். திருமங்கலம் இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் மின்வெட்டு இல்லை. தேர்தல் முடிந்த பிறகு 4 மணி நேரம் மின்வெட்டு. அதேபோல தான் தேர்தல் வரை மின்வெட்டு இல்லை என்று கூறுவார்கள். தேர்தல் முடிந்த பின்னர் மின்வெட்டை ஏற்படுத்தி விடுவார்கள்.
தே.மு.தி.கவை 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்தால் என்னால் பஸ் கட்டணம், மின் கட்டணத்தை குறைக்க முடியும். நான் சொன்னேன், ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு உலக வர்த்தக மையம் அமைப்பேன் என்று, அப்படி அமைத்தால் வேலை இல்லா திண்டாட்டம் நீங்கி விடும். அதேபோல பெண்களுக்கு கலைக்கல்லூரி, அறிவியல் கல்லூரி தொடங்குவேன். லஞ்சத்தை ஒழிப்பேன்.
நல்லது செய்வேன்
சிலர் வறுமையை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு தங்களுடைய வறுமையை ஒழித்தார்களே தவிர பொதுமக்களின் வறுமையை ஒழிக்கவில்லை. நான் எனது சட்டமன்ற தொகுதியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம் திறந்து வைத்துள்ளேன். இதில் ஏராளமான பெண்கள் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
40 தொகுதியிலும் தே.மு.தி.க ஜெயித்தால் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம் தொடங்கி வைப்பேன். நாங்கள் ஜெயித்தால் மக்களுக்கு நல்லது செய்வோம். எனது கூட்டணி மக்களோடும் தெய்வத்தோடும் தான். இக்கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் சுரேசுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு நடிகர் விஜயகாந்த் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட அவைத் தலைவர் வி.எல்.பாபு, மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விஜயகாந்த் காடுவெட்டி, பூந்தமல்லி ஆகிய ஊர்களில் பேசினார்.
திருவள்ளூர்
முன்னதாக திருவள்ளூர் கடைத்தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயகாந்த் பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி, ஆட்சி செய்து கோடி கோடியாக சம்பாதித்துள்ளார்கள். ஆனால் மக்கள் கஷ்டம் தீர்ந்தபாடில்லை. காரணம் மக்களை நேசிக்காத தலைவர்கள் இருப்பதால் இந்த நிலைமை ஏற்படுகிறது. நான் மக்களை நேசிக்கிறேன்.
மக்களை நேசித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்து நல்லாட்சி செய்தார். எனக்கும் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் நானும் எம்.ஜி.ஆர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. உளவுத்றையினர் தங்கள் வேலையை விட்டு விட்டு என்னை கண்காணிப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். நான் பொதுக்கூட்டத்தில் பேசும் போது மின்தடை ஏற்படுத்துகின்றனர். தேர்தலுக்காக பஸ் கட்டணத்தை குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்த மறுநாளே பஸ் கட்டணத்தை அதிகரித்து விடுவார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.