புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி தாயார் ஆண்டாளுக்கும், தந்தை அழகர் சாமிக்கும் மகனாக பிறந்தார். அக்கா விஜயலட்சுமி, தங்கை திருமளா, அண்ணன் நாகராஜ், தம்பிகள் செல்வராஜ், பால்ராஜ், ராம்ராஜ், மற்றும பிரித்திவிராஜ் ஆகியோர்கள்.

புரட்சி கலைஞர் தனது கல்வியை தேவகோட்டையிலுள்ள தே பிரித்தோ உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மதுரையிலுள்ள நாடார் உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார். இளைய வயதில் படிப்பைவிடவும் விளையாட்டிலேயே அதிக ஆர்வமாக இருந்தார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றதால் அதனால் ஈர்க்கப்பட்டு இந்தியை எதிர்த்தார். இந்த நிகழ்ச்சி கண்ணுக்குள் தீத்துளியாய் தூறியதால் இதயம் நெருப்புப்பையாய் மாறியது. எனவேதான் இறுதிவரை தமிழ் தவிர பிற மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியாய் இருந்தார்.

பள்ளிப்பருவத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களை அதிகம் பார்த்ததினால் அவருக்கு தெரியாமலே வள்ளல் குணம் அவருக்குள் வளர்ந்து விட்டது. நடிப்புத்தணம் வளர்ந்துவிட்டது. நடிப்புத் தனம் முளைத்துவிட்டது. ஆனால் திரைப்படத்தில் நடிப்போம் என்று மறந்தும் கூட கனவு கண்டதில்லை. முட்டி முட்டி பார்த்தாலும் படிப்பு என்பது எட்டிக்காயாகவே இருந்ததால் அதை விட்டு விட்டு அப்பா பார்த்துவந்த “ரைஸ்மில்” நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார்.